தொப்பை போலீசார் பணியில் நீடிப்பதில் சிக்கல் – கர்நாடகாவில் அதிரடி நடவடிக்கை

தொப்பை உள்ள போலீசார் 3 மாதங்களில் உடற்பயிற்சி செய்து குறைக்க வேண்டும் இல்லை என்றால் பணியிட மாற்றம் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என கர்நாடக ரிசர்வ் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் என்றால் உரிய உடற்பயிற்சி செய்து தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவான விதியாகும். ராணுவத்தில் இது போன்ற நடைமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், போலீசில் இதன் கடுமை அதிகம் இருப்பதில்லை.

இதன் காரணமாக போலீசார் பலர் அளவுக்கு மீறி தொப்பையை வளர்த்துக்கொண்டு உலா வருகிறார்கள். எனவே, போலீசாரையும், தொப்பையையும் ஒப்பிட்டு கேலி செய்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் தொப்பை போலீசாருக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளனர். அங்கு செயல்படும் ரிசர்வ் போலீஸ் பட்டாலியன் பிரிவில் பல்லாயிரக்கணக்கான போலீசார் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் யாரும் தொப்பை வைத்திருக்க கூடாது என்று கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ரிசர்வ் போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். போலீசார் அனைவரும் உரிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.

விளையாட்டு போன்றவற்றில் பங்கேற்க வேண்டும். இதன் மூலம் தங்கள் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டும். யாருக்கும் தொப்பை இருக்க கூடாது. இதை கடைபிடிக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்காக 3 மாதம் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்காதவர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட துறை ரீதியான பல நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியது வரும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. பாஸ்கர்ராவ் கூறும் போது, பல போலீசார் தங்களது உடலை ஆரோக்கியமாக பாதுகாப்பதில்லை. மது குடிப்பது, முறையற்ற உணவு, புகை பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிக்கிறார்கள்.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 40 வயதில் இருந்து 50 வயதுக்குட்பட்ட 150 போலீசார் மரணம் அடைகிறார்கள். மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்றவற்றில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!