ஹிஜாப் சர்ச்சை: கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 3வது நாளாக இன்றும் விசாரணை!

மத அடையாளத்தோடு செல்லக்கூடாது என்ற நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும் என்றும் மத அடையாளத்தோடு செல்ல கூடாது என்ற உத்தரவு அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். இந்த வழக்கு மூன்றாவது நாளாக இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
    
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. அதனை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 6 மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அதன்பின்னர் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை தொடர்பான மாணவர்கள் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கர்நாடகாவில் பதற்றத்தை தணிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கர்நாடக ஹைகோர்ட்டில் வழக்கு
ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பின்னர் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு இன்று, தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெ.எம்.காஸி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜரானார்.

யாருக்கும் தீங்கில்லை
விசாரணையின் போது, ஹிஜாப் அணிவதை தடை செய்ய கர்நாடக அரசு பொது ஒழுங்கை காரணமாக குறிப்பிடுகிறது, ஆனால் ஹிஜாப் அணிவதால் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை என தேவ்தத் காமத் வாதிட்டார். பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படாத நிலையில் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் அரசு தலையிட முடியாது என்று குறிப்பிட்ட அவர், சட்ட விதி 25ன் படி ஒருவர் தங்களின் மத உரிமைகளை, நம்பிக்கைகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

ருத்ராட்சம்
தான் பள்ளிக்கு சென்ற போது ருத்ராட்சம் அணிந்து சென்றதாகவும், அப்போது அதை யாரும் தடுக்கவில்லை என்றும் கூறினார். தான் என் மதத்தை ஷோ செய்வதற்காக அப்படி அணிந்து செல்லவில்லை என்று குறிப்பிட்ட வழக்கறிஞர், ருத்ராட்சம் மீது நம்பிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். பல நீதிபதிகள் ருதராட்சம் அணிந்திருப்பதை சுட்டிக்காட்டினார்.

தவறான முன் உதாரணம்
ஹிஜாப் அணிவதும் மத நம்பிக்கையின் அடிப்படையில் தான், அதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்று தெரிவித்தார். ஆனால் காவித்துண்டு அணிவது உபநிடதத்தில் பின்பற்றுவதாக தெரியவில்லை, ஹிஜாபுக்கு போட்டியாக மதத்தை காட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் ஷால் அணிவது தவறான முன் உதாரணம் என்றும் வழக்கறிஞர் தேவ்தத் காமத் கூறினார்.

அடிப்படை உரிமைக்கு எதிரானது
தொடர்ந்து பல்வேறு வழக்குகளை உதாரணமாக சுட்டிக்காட்டிய அவர், நான் ரோட்டில் நடப்பதை சிலர் எதிர்க்கலாம். அதற்காக நான் சாலையில் நடக்க கூடாது. அது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் என்று அரசு தடுக்க முடியாது. அப்படித்தான் ஹிஜாப்பும் என்று மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேவ்தத் காமத் வாதம் வைத்தார். மத அடையாளத்தோடு செல்லக்கூடாது என்ற நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார். மத அடையாளத்தோடு செல்ல கூடாது என்ற உத்தரவு அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத் குறிப்பிட்டார்.

இன்று மீண்டும் விசாரணை
இதையடுத்து இன்னொரு மாணவி தொடுத்த மனுவில் வேறு ஒரு வழக்கறிஞர் வாதம் செய்தார். ஆனால் அவர்கள் முறையாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாததால் விசாரணை 16ஆம் தேதி நடக்கும் என்று கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.

இன்றைய தினம் மாணவர்கள் மத சின்னம் அணிவதற்கும் ஹிஜாப் அணிவதற்கும் விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுமா அல்லது தடை நீடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!