“பெரும் ஆபத்தை எதிர்நோக்கும் இலங்கை மத்திய வங்கி”

கடந்த வருட இறுதியில் இரண்டு பில்லியன் டொலர் சொத்து பற்றாக்குறையை கொண்டிருந்த இலங்கை மத்திய வங்கி, தொடர்ந்தும் கைமாற்று கடன் வசதிகளின் கீழ் அந்நிய செலாவணியை பெற்றுக்கொண்டதால், பெரும் ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டப்ளியூ.ஏ. விஜேவர்தன ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டு தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் சிநிமல் அபேரத்ன, கலாநிதி ஆமிந்த மெத்சில, கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி, கலாநிதி நிஷான் டி மெல் ஆகிய பொருளாதார ஆய்வாளர்களும் இந்த நிலைமையை சுட்டிக்காட்டி இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மேலும் 250 மில்லியன் டொலர் அவசர கடனை வழங்குமாறு, இந்தியாவிடம் கோரியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் கடந்த ஒன்றரை மாத காலத்தில் கைமாற்று கடன் வசதியின் கீழ் சுமார் 5 ஆயிரம் மில்லியன் டொலர் அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான இணக்கபாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைமாற்றாக பெறப்படும் கடனுக்காக அதிகளவில் வட்டியை செலுத்த நேரிடும் என்பதுடன் இந்த கடன் மூலம் சொத்துக்கள் உருவாக்கப்படுவதில்லை என்பதால், குறிப்பாக இலங்கை மத்திய வங்கி மிகப் பெரிய ஆபத்துக்கு உள்ளாகி இருப்பதாக அவர்கள் சுட்டிககாட்டியுள்ளனர்.

இந்த ஆண்டின் இறுதியில் வெளிநாட்டு கடன் மற்றும் வட்டியாக 6 ஆயிரத்து 903.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. குறுகிய கால அன்றாக கொடுக்கல், வாங்கல்களுக்காக அந்நிய செலாவணியை கடனாக பெறுவதால், மிகப் பெரிய வட்டி தொகையும் சேர்ந்துள்ளது.

நாட்டின் நிதி கட்டமைப்பை கையாளும் இலங்கை மத்திய வங்கியோ, அரசாங்கத்தில் உள்ள பொறுப்புக் கூற வேண்டிய நபர்களோ இது சம்பந்தமாக எவ்வித கவனத்தையும் செலுத்தாதது மிகப் பெரிய அழிவின் பிரதிபலனை பெற்றுக்கொடுக்க காரணமாக அமையும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!