கோட்டா அரசாங்கத்தில் மீண்டும் குழப்பம்! அமைச்சின் சொத்துக்களை திருப்பியளித்த அமைச்சர் வாசுதேவ!

நீர் விநியோகத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமது உத்தியோகபூர்வ வீட்டையும் வாகனங்களையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அமைச்சு பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வதில்லை என முடிவு செய்திருந்த நிலையில், அமைச்சருக்கான சிறப்புரிமைகளை அனுபவிப்பது நியாயமற்ற செயல் என்று உணர்ந்ததன் காரணமாக அவற்றை திரும்ப ஒப்படைத்ததாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தான் பயன்படுத்தி வந்த இரண்டு வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வீட்டையும் அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாகவும் தனது பயணங்களுக்காக சகோதரரின் வாகனத்தையோ அல்லது நெருக்கமானவர்களிடம் வாகனம் ஒன்றை பெற்றுக்கொண்டு பயன்படுத்த போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும் என்பதால், அமைச்சு பணிகளில் இருந்து விலகிக்கொண்டேன்”

“எனினும் அமைச்சு பதவியில் இருந்து விலகுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை”எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி அண்மையில் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, அமைச்சு பணிகளில் இருந்து விலகிக்கொண்டதுடன் அமைச்சரவைக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானித்து இருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!