அரசை விரட்டுவதற்கு தலைமைத் தாங்கத் தயார்!

தற்போதைய ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முன்வருவார்களாக இருந்தால், அதற்கு தலைமைத் தாங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
    
இரத்தினபுரியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

கடந்த 74 வருடங்களாக ஆட்சி செய்த ஆட்சியாளர்கள, நாட்டு மக்களின் நம்பிக்கையை இல்லாதொழித்துள்ளனர். எனினும் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் மக்கள் வைத்துள்ளனர். நாட்டில் ஆட்சிக்கு வரும் அனைத்து கட்சிகளும் தங்களது எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதையும், அதற்கு முன்னர் இருந்த அரசாங்கம் செய்த வேலைத்திட்டங்களை இல்லாதொழிப்பதையுமே செய்து, நாட்டை சூறையாடியுள்ளனர் என்றார்.

அது மாத்திரமன்றி நாட்டின் வளங்களையும் வெளிநாடுகளுக்கு வழங்கி நாட்டு மக்களையும் கடனாளியாக மாற்றி இருக்கிறார்கள். இதனை மாற்ற வேண்டும். ஊழலற்ற, வீண் விரயமற்ற நேர்மையான நபர்களைக் கொண்ட ஆட்சியே நாட்டுக்கு இப்போது தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவால் செய்ய முடியாது. காரணம், அவரின் அருகில் இருப்பவர்களும் ஊழல்வாதிகளே. நாட்டு மக்களை வதைக்கும் இந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்கு மக்கள் முன்வருவார்களாக இருந்தால் அதற்குத் தலைமைத்தாங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

இந்த ஆட்சியை விரட்டியடிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும், விலைவாசி அதிகரிப்பை உடன் நிறுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், எமது நாட்டின் வளங்களை வெளிநாட்டுக்கு விற்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் இம்மாதம் 18ஆம் திகதிப் பாரிய ஆர்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!