உக்ரைனின் திரையரங்கம் மீது வான்வழி தாக்குதல் நடத்திய ரஷ்யா: பதுங்கியிருந்த 1,200 பேர் நிலை?

உக்ரைனின் மரியுபோல் நகரை ரஷ்ய இராணுவம் மொத்தமாக முற்றுகையிட்டுள்ள நிலையில், அப்பாவி பொதுமக்கள் பதுங்கியிருந்த திரையரங்கம் ஒன்றின் மீது வான்வழி தாக்குதலை முன்னெடுத்துள்ளது ரஷ்யா. உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள குறித்த திரையரங்கமானது, தொடர் ரஷ்ய வெடிகுண்டு தாக்குதலுக்கு மத்தியில் அப்பகுதி பொதுமக்களுக்கு பாதுகாப்பான இடமாக இருந்து வந்தது.
    
மட்டுமின்றி, அங்கேயே உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளதுடன், மக்கள் அச்சமின்றி இரவையும் கழித்து வந்துள்ளனர். மரியுபோல் நகரம் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான குண்டுவீச்சு சுமார் 20,000 உக்ரேனியர்களை அங்கிருந்து வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளது,

அதே நேரத்தில் 2,300 க்கும் மேற்பட்ட குடிமக்கள் அப்பகுதியில் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த திரையரங்கம் மீது ரஷ்ய துருப்புகள் குண்டுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

நகர துணை மேயர் வெளியிட்ட தகவலில், 1000 முதல் 1,200 குடுமக்கள் சம்பவத்தின் போது குறித்த திரையரங்கில் பதுங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்கு பின்னர் மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மற்றும் உயிர் தப்பியவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை உறுதியான தகவக் ஏதும் வெளிவரவில்லை என்றே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் பாராளுமன்றம் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், இடிபாடுகளில் சிக்கி எத்தனை பேர் இறந்தனர் என்பது தெரியவில்லை.

தற்போது கடுமையான போர் நடக்கின்றன. தடுப்புகளை கடந்து யாராலும் உள்ளே அத்துமீற முடியாது, எத்தனை பேர் உயிர் பிழைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, மரியுபோல் நகர சபை வெளியிட்ட தகவலில். இந்த கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலின் அளவை மதிப்பிடுவது சாத்தியமற்றது என குறிப்பிட்டுள்ளது.
அப்பாவி மக்கள் 1.200 பேர்கள் கொத்தாக கொல்லப்பட்டார்களால், இல்லை உயிருடன் தப்பியவர்கள் எவரேனும் உள்ளனரா என்பது தொடர்பில் இன்னும் சில மணி நேரங்களில் தெரியவரும் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!