ஐ.ஓ.சி நிறுவனமானது எரிபொருளின் விலைகளை அனாவசிய முறையில் அதிகரித்துள்ளது: மகிந்த அமரவீர

ஐ.ஓ.சி நிறுவனமானது எரிபொருளின் விலைகளை அனாவசிய முறையில் அதிகரித்துச் செல்வதாக தமக்கு அறிவித்தல்கள் வந்துள்ளதாகவும் அவ்வாறு அதிகரிக்கப்பட்ட விலை உயர்வுகள் சட்டத்திற்கு முரணானதாக இருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவ்வாறு உயர்த்தப்பட்ட எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சுற்றாடல் துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – இலுப்பங்குளம் வீதியில் சட்டவிரோதமாக கிரவல் அகழ்வு மேற்கொண்டு எவ்விதமான புனரமைப்பும் இல்லாத நிலையில் கைவிடப்பட்ட 25 ஏக்கர் நிலப்பரப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு நேற்று(27) திருகோணமலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,


இப்பிரதேசத்தில் சட்டவிரோத அகழ்வினால் குறித்த பிரதேசம் எந்த ஒரு அபிவிருத்தியும் இல்லாமல் காணப்படுவதுடன், குறித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு நிலத்தினை சமாந்தரமாக வெட்டப்பட்டு வன பிரதேசத்திற்குச் சொந்தமான குறித்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது கூறினார்.

மேலும் சம்பூர் பிரதேசத்தில் அமைக்கப்படவிருக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

சம்பூர் பிரதேசத்தில் காற்றாடி மட்டும் சூரிய மின்கலத்தின் ஊடாக மின் உற்பத்தியினை பெரும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான வேலைத்திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுத்து வருவதுடன் இதுவரை எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எந்த ஒரு ஒப்பந்தமும் கைச்சாத்திடவில்லை” என்றார்.

மேலும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் கடந்த காலங்களில் பெரும் அளவிலான இலாபம் ஈட்டுவதாகவும் இலங்கை மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாகவும் வெளிவருகின்ற கருத்துக்கள் தொடர்பில் உங்கள் கருத்து என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,

இலங்கை மின்சார சபைக்குள் சில கட்டுப்பாடுகள், அளவுக்கு அதிகமான ஊழியர்கள் போன்ற பல பிரச்சனைகள் இருக்க முடியும் மேலும் மின்சார சபை ஒன்றியத்தினர் மேற்கொள்ளும் சில முரண்பாடான செயற்பாடுகளும் இவ்வாறு மின்சார சபை நட்டத்தில் இயங்குவதற்கான காரணமாகவும் இருக்கலாம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!