இலங்கைக்கும் IMF இற்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம்……

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாத நிலையில், லெபனானுக்கு ஏற்பட்ட நிலைமையே இலங்கைக்கும் ஏற்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா குறிப்பிட்டார். 
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது தொடர்பில் லெபனானில் இரண்டு நிலைப்பாடு காணப்பட்டதாக அவர் கூறுகின்றார். 

இதனால், அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் இடையே முரண்பாடு காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 

அவ்வாறானதொரு நிலைமையே தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா குறிப்பிட்டார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் மெய்நிகர் முறையில் சந்திப்பொன்றை முன்னெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

அத்துடன், நிதியமைச்சர் பதவி விலகிய நிலையில் இந்த கோரிக்கை முன்னதாக விடுக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி குறித்த சந்திப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  

இந்த நிலையில் நிதியமைச்சர் அலிசப்ரியின் இராஜினாமா ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், நிதியமைச்சராக அவர் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் நிதியமைச்சர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தம் இருவருக்கும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் குறித்த மெய்நிகர் சந்திப்பையேனும் ஏற்பாடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!