இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் வெற்றிகரமாக இயக்கம்!

மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் இந்தியாவில் ‘டோர்னியர்’ இலகுரக விமானம் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இது 17 இருக்கைகள் மட்டுமே கொண்ட சிறிய விமானம் ஆகும்.

பொதுத்துறை விமான நிறுவனமான அல்லயன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம் நேற்று முதல் முறையாக தனது வர்த்தக போக்குவரத்தை தொடங்கியது. அசாம் மாநிலம் திருப்ருகரில் இருந்து அந்த விமானம் புறப்பட்டது.
    
மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா, மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு மற்றும் பிரபலங்கள் அதில் பயணம் செய்தனர். அருணாசலபிரதேச மாநிலம் பாசிகாட் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.

சிறிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்கும் பிரதமரின் ‘உடான்’ திட்டத்தால் இது சாத்தியமானதாக 2 மத்திய மந்திரிகளும் தெரிவித்தனர்.

இதன் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானத்தை பயணிகள் போக்குவரத்துக்கு இயக்கிய முதலாவது விமான நிறுவனம் என்ற பெருமையை அல்லயன்ஸ் ஏர் பெற்றுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!