இந்தியாவிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய எகிப்து முடிவு!

இந்தியாவிடம் இருந்து கோதுமை இறக்குமதி செய்ய எகிப்து நாடு முடிவெடுத்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலகளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா,உக்ரைன் ஆகிய நாடுகள் முன்னணி வகிக்கின்றன.

தற்போது உக்ரைனில் போர் நடப்பதாலும், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் அவை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளன. இச்சூழலை பயன்படுத்தி தனது சந்தையை விரிவாக்கிக்கொள்ள இந்தியா முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
    
இதன் ஒரு பகுதியாக எகிப்தை இந்தியா அணுகிய நிலையில் கோதுமையை வாங்க அந்நாடு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். எகிப்து அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்து கோதுமை கிடங்குகளை பார்வையிட்டுச்சென்ற நிலையில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்தியாவிடம் இருந்து 10 லட்சம் டன் கோதுமை வாங்க எகிப்து முடிவு செய்துள்ளதாக அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.

இந்திய விவசாயிகளின் உழைப்பால் தானியக்களஞ்சியங்கள் நிரம்பியுள்ளதாகவும், அதைக் கொண்டு உலகின் உணவுத் தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்றும் தனது ட்விட்டர் பதிவில் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!