வேறு வழிகளில் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டி வரும்!

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கம் கவிழும் வரை எதிர்க்கட்சிகள் ஓயாது என்றார்.
    
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மகாசங்கம், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட முழு நாடும் தற்போது அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கண்டியில் இருந்து ஆரம்பமான பேரணியானது பிரதான வீதியூடாக கொழும்பை வந்தடையும் எனவும் குறிப்பிட்டார்.
தற்போது பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் இன்று எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன என்றார்

போராட்ட பேரணி அரசியல் சார்பற்றதாக இருக்கும், எனவே அனைத்து குடிமக்களும் அதில் பங்கேற்கலாம் என்ற அவர், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி பாரிய பேரணி ஒன்றையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் பலத்தை வெளிக்காட்டும் வகையில் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் கவிழும் வரை எதிர்க்கட்சிகள் ஓயாது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!