இன்று நாடு முழுவதும் ஹர்த்தால்!

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியாக இன்று ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
   
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலகாத நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால், மற்றும் போராட்டங்கள் பணிபுறக்கணிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களில் கறுப்புக்கொடிகளை ஏற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் அரச சார்பற்ற துறையினர் உட்பட தனியார் துறையினர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.

இதேவேளை, இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் சாதாரண நடவடிக்கைகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் சேவைகள் வழமையான முறையில் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு ஆதரவளிக்க விசேட வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்போது , பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் செயற்குழு இதனை அறிவித்துள்ளது.

இதேவேளை, புற்றுநோய் வைத்தியசாலை, மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் தமது தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவரும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!