ரணிலின் அரசியல் அணுகுமுறைக்கு பெரும் சவால்!

முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி எதிர்வரும் 18ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், கெடுபிடிகளும் முட்டுக்கட்டைகளும் பாதுகாப்புப் படைகளால் உருவாக்கப்பட்டு வருவது புதிய பிரதமரின் ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறைக்கு ஒர் பெரும் சவாலாக அமைந்துள்ளது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்

    
அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “ பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கி சிறைப்பட்டிருக்கும் சூழ்நிலையில்,நன்கறியப்பட்ட அரசியற் காரணங்களால் பிரதமர் பதவிக்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவினால் நெருக்கடி நிலைமையை வெற்றிகரமாக கையாள முடியும் என்ற நம்பிக்கையுடன் கூடிய எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் மேலோங்கத் தொடங்கியுள்ளது.

அதே நேரத்தில், காலிமுகத்திடலில் தொடர்ந்து நடாத்தப்படும் ஜனநாயகப் போராட்டத்திற்கு அரசாங்கத்தினால் தடை எதுவும் இருக்க மாட்டாது என்ற புதிய பிரதமரின் உடனடியான அறிவிப்பு வரவேற்புக்குரியது என்பதற்கு அப்பால்,அனுபவம் நிறைந்த அரசியல் ஆளுமையின் யதார்த்த பூர்வமான அணுகுமுறையாக அது மதிப்பிடப்பட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி எதிர்வரும் 18ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள நிலையில்,இந்த நிகழ்வுக்கு எதிராக கடந்த முறையைப் போலவே கெடுபிடிகளும் முட்டுக்கட்டைகளும் பாதுகாப்புப் படைகளால் உருவாக்கப்பட்டு வருவது புதிய பிரதமரின் ஆரோக்கியமான அரசியல் அணுகுமுறைக்கு ஒர் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடந்த காலத்தில் சில முக்கியமான சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பில் வெளிப்படுத்தப்பட்ட ஆதரவும் அனுசரணையும் நன்கறியப்பட்டவை. ஆயினும்,அவர் பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் சில கசப்பான ஏமாற்றங்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருந்த போதிலும்,அவர் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் காத்திரமாக நிலைகொண்டதில்லை.

இந்தப் பின்னணியில் காலிமுகத்திடலுக்கு ஒரு நீதி,முள்ளிவாய்க்காலுக்கு வேறு நீதி என்ற பாரபட்சமான பார்வை அவரிடம் இருக்க மாட்டாது என்றெ தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே,நீதியான அணுகுமுறையை முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி விடயத்தில் கையாள்வதற்கு அவர் உடனடியாக முன்வரவேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி என்பது புதிய பிரதமருக்கு ஒர் அக்கினிப் பரீட்சையாகவே இருக்கும் அதில் அவர் தேறுவதோ அல்லது தவறுவதோ தமிழ் மக்களின் அரசியல் சிந்தனைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!