அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள முடிவு – மைத்திரியின் தீர்மானத்தை மீறும் சிரேஷ்ட உறுப்பினர்கள்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு கட்சிக்குள் கடும் போராட்டத்தை முன்னெடுத்துளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, ஜகத் புஷ்ப குமார, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் இந்த குழுவில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும் மூன்று பிரதி அமைச்சுப் பதவிகளும் மாத்திரமே வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்த நிலையில், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்த குழுவினர் ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

எவ்வாறாயினும், அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் ஆனால் அரசாங்க அமைச்சுப் பதவிகளை கோரக் கூடாது என சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கட்சித் தீர்மானத்திற்குப் புறம்பாக அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கு இந்த எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, கட்சிக்கு வெளியில் தீர்மானங்களை மேற்கொள்பவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!