இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டிருந்தால் இந்தளவு மோசமான நிலை ஏற்பட்டிருக்காது!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தெரிவித்துள்ளார்.
    
‘இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டிருந்தால் இப்போதைய பொருளாதார நெருக்கடியை தவிர்த்திருக்க முடியுமல்லவா?’ என்று கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“எமது ஆட்சிக் காலத்தில் தீர்வை வழங்க நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை ஒரு பக்கத்தில் விடுதலைப்புலிகளும் மறுபக்கத்தில் அன்றைய எதிர்க்கட்சியினரும் குழப்பியடித்தார்கள். அதன் பின்னரும் தீர்வை வழங்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. நல்லாட்சி அரசின் காலத்தில் கூட தீர்வு சம்பந்தமான விடயத்தில் முன்னேற்றகரமாக நகர்வுகள் இருந்தாலும், இறுதிக் கட்டத்தை அடைய முடியாமல் போய்விட்டது. இதற்கு நல்லாட்சி அரசில் அங்கம் வகித்த சகலரும் பொறுப்புக்கூற வேண்டும்.

ராஜபக்சக்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்து, தாமே ராஜாக்கள் ஆக வேண்டும் என்று கனவு கண்டு அதைச் சாதித்தார்களே தவிர, தீர்வு விடயத்தில் துளியளவும் அக்கறை செலுத்தவில்லை. போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் விடயத்தில் அசமந்தமாகவே ராஜபக்சக்கள் செயற்பட்டனர்.

இன்று பொருளாதாரம் நெருக்கடி உச்சமடைந்ததையடுத்து ராஜபக்சக்களுக்கு எதிராகவே சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். இந்தநிலையில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகியதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் அந்தப் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக இருந்த இந்த அரசின் தலைவரான ஜனாதிபதி கோட்டாபய அனைத்து மக்களின் வேண்டுகோளையும் புறம்தள்ளி பதவியில் இருக்கின்றார்
.
ஜனாதிபதிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடும் மாணவர்கள் மீது பொலிஸார் மனிதாபிமானம் பாராது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி அவர்களைத் தாக்கி வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டை இன்னும் மோசமான நிலைமைக்கே இட்டுச் செல்லும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலகவேண்டும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் நலன் கருதிச் செயற்படாமல் அனைத்து இன மக்களின் நலன்கருதி சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து தீர்மானங்களை எடுக்கவேண்டும். அப்போதுதான் இந்தப் பொருளாதார நெருக்கடி தீர்வைக் காண முடியும்”- என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!