ராமேஸ்வரத்தை உலுக்கிய கொலை சம்பவம்: 6 வடமாநில இளைஞர்கள் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் நேற்று முன்தினம் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றார். மாலை வரை வீடு திரும்பாததால் அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர்.

மேலும் அந்த பெண் மாயமானது குறித்து ராமேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் அந்த பெண் அதே பகுதியில் கடற்கரையை ஒட்டிய இடத்தில் முள் புதரில் ஆடைகள் கலைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு முகம் உள்ளிட்ட பகுதிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது.

அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண் பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் பணிபுரியும் ஒடிசா மாநில வாலிபர்கள் பிரகாஷ் (வயது 22), விகாஷ் (24), ராகேஷ் (25), பிரசாத் (19), ரஞ்சன்ராணா (34), பிண்டு (19) ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசாருடன் நின்ற பொதுமக்கள் வாலிபர்கள் 6 பேரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் இறால் பண்ணையின் முன் பகுதியில் இருந்த வாகனம் மற்றும் பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த வாலிபர்கள் 6 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடல்பாசி சேகரித்துவிட்டு தனியாக வந்த பெண்ணை 6 பேரும் வழிமறித்து புதருக்குள் தூக்கிச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 6 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் அவர்கள் 6 பேரும் காயமடைந்திருந்தனர். இதனால் 6 வாலிபர்களும் சிகிச்சைக்காக மதுரை மற்றும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கூட்டு பலாத்காரம் செய்து பெண்ணை கொன்ற கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், வடமாநில வாலிபர்கள் பணிபுரிந்த இறால் பண்ணையை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள், குடும்பத்தினர் வடகாடு மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ராமேசுவரம்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 6 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் எம்.எல்.ஏ. பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை வெகுநேரத்திற்கு பின் கைவிட்டனர்.

அதன்பிறகு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற ஒடிசா மாநில வாலிபர்கள் 6 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் இருப்பதால் 6 வாலிபர்களிடமும் போலீசார் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. சிகிச்சை முடிந்ததும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதன்பிறகு அவர்கள் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!