இந்தியாவுக்கு மத்தலவைக் கொடுப்பது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்! – எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச

மத்தல விமான நிலையம், இந்தியாவின் வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். இது இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இரு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே, கடந்த அரசாங்கத்தால் அந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய 10 துறைமுகங்களில் ஒன்றான ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகில், விமானச் சேவைகளை ஊக்குவிப்பதும் சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளை தொடர்புபடுத்தக்கூடிய பிரதான விமான தளமாக அமைப்பதுமே இவ்விரு காரணிகளாகும்.

தற்போதும், 7 சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகள், மத்தலயில் உருவாகியுள்ளன. 150 விமான சேவைகள், மத்தல விமான நிலையத்தின் வான்பரப்பைக் கடந்துப் பயணிக்கின்றன. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளின் விமானச் சேவைகள், இவ்வான்பரப்பைக் கடந்தே பயணிக்கின்றன.

அத்துடன், மத்தல விமான நிலையம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கும் விமானங்களின் வான்பரப்பு விமானப்பாதைப் குறுகியதாகக் மாற்றமடைகின்றது. இதனால், மத்தல விமான நிலையத்தின் கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம், அவ்விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, கடுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்புச் செய்துள்ளமையானது, அநாவசியமான முதலீடாகும்.

இவ்வாறான விமான நிலையத்தை, தற்போதைய ஆட்சியாளர்கள், குறைந்த பெறுமதிக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல. குறித்த விமான நிலையத்துக்காகப் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதானது, திறைசேறிக்கு அழுத்தமாகவும் அமையப்போவதில்லை.

மத்தல விமான நிலையம் உட்பட சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பை, பாதுகாப்புப் பகுதி என்ற பேரில் இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திர்மானித்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில், இந்தியாவிலிருந்து 14 மைல்கள் தூரத்தில், இந்திய விமானப் படையின் ஹெலிகொப்டர்களை நிறுத்தி வைக்கக்கூடிய போர்க் கப்பலெனெ இலங்கையை வர்ணித்துள்ள நிலையில், திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா கால்பதிப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துவிடுமென, விமல் வீசவன்ச எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!