போராட்டத்தை கலைத்த இராணுவம் – உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு!

காலி மைதானத்தில் இலங்கை – அவுஸ்திரேலியாவிற்கு இடையில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது, காலி கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இராணுவ தலையீட்டுடன் தாக்கப்பட்டு கலைக்கட்ட சம்பவம் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    
அமரதிவாகர லியனாராச்சி மற்றும் ஜி.எச்.அஜித் குமார ஆகிய இரு சட்டத்தரணிகளினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காலி கோட்டை இராணுவ முகாமின் கட்டளை தளபதி, இராணுவ தளபதி, பொலிஸ் மா அதிபர், காலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, காலி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் , சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 30 ஆம் திகதி ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் தாம் ஈடுபட்டதாக மனுதாரர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அப்போது அந்த வளாகத்திற்குள் நுழைந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் தங்களது போராட்ட பதாகைகளை வலுக்கட்டாயமாக அகற்றியதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
தன்னிச்சையாகச் செயற்பட்ட இராணுவ அதிகாரிகள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாடியதாகவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு தமக்கு அடிப்படை உரிமை உண்டு என ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டிய போதிலும், அவ்வாறானதொன்றை இந்த இடத்தில் மேற்கொள்ள முடியாது என இராணுவத்தினர் மறுத்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசியலமைப்பு ஊடாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஒன்றுகூடல் மற்றும் கொடூரமான சித்திரவதைகளில் இருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் இராணுவத்தினரின் செயற்பாட்டினால் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் தமக்கு நட்ட ஈடாக தலா 5 மில்லியன் ரூபாவை செலுத்த பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் மனுவூடாக கோரியுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!