கப்பல்கள் வருகிறதாம் – டோக்கன் தேவையில்லை என்கிறார் அமைச்சர்!

ஜூலை மாதத்தில் இரண்டு டீசல் கப்பல்களையும் ஒரு பெற்றோல் கப்பலையும் கொண்டுவருவதற்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
    
மேலும், லங்கா ஐஓசி நிறுவனத்தின் ஊடாக மேலும் பல எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளன.

அதன்படி முதற்கட்டமாக 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல் இந்த வாரம் நாட்டை வந்தடைய உள்ளது, அடுத்த வாரம் 50,000 மெட்ரிக் தொன் பெற்றோல் கப்பலை இலங்கைக்கு கொண்டு வர மலேசிய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் இருப்பு அளவு தற்போது மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது, இதனால் தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மட்டுமே செய்யப்படுகிறது.

தலா 40,000 மெட்ரிக் தொன் கொண்ட இரண்டு டீசல் கப்பல்கள் ஜூலை 8 அல்லது 9 மற்றும் ஜூலை 11 மற்றும் 14 க்கு இடையில் இலங்கையை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜூலை 15 மற்றும் 17 க்கு இடையில் மற்றுமொரு டீசல் கப்பலை கொண்டு வருவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன், கட்டண செலுத்தப்பட்ட பெட்ரோல் கப்பல் ஜூலை 22 அல்லது 23 ஆம் திகதிகளில் இந்த நாட்டை வந்தடைய உள்ளது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு 135,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெய் கப்பல் ஜூலை 15ம் திகதியும் மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல் ஆகஸ்ட் 12ம் திகதியும் வரவுள்ளன.

மேலும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஜூலை 13-14 திகதிகளில் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 12,000 மெட்ரிக் தொன் டீசலையும், ஜூலை 30-31 திகதிகளில் 5000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 24,000 மெட்ரிக் தொன் டீசலையும் நாட்டுக்கு கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை, கப்பல்கள் தாமதமாக வருவதால் எரிபொருள் பெற வரிசையில் நிற்கும் மக்களுக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கும் வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் டோக்கன் வழங்கும் முறையை பாதுகாப்பு படையினர் அமுல்படுத்தியதாகவும், அதனை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!