பாராளுமன்றம் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் – மோடி

நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக இயங்க அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதிவரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் 46 மசோதாக்கள் நிறைவேற வேண்டியுள்ளது. 18 அமர்வுகளாக மொத்தம் 24 நாட்கள் இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து பாராளுமன்ற செயல்பாடுகள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முற்றிலுமாக முட்க்கினர். இதனால், பல மசோதாக்களை அறிமுகப்படுத்த முடியாமலும், நிறைவேற்ற இயலாமலும் போனது.

இந்நிலையில், கடந்தமுறை முடங்கியதுபோல் இல்லாமல் எதிர்வரும் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி அனந்த் குமார், ‘நாளை தொடங்கும் பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைய அனைத்து கட்சியினரின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் மோடி கேட்டுகொண்டதாக தெரிவித்தார்.

அனைத்து கட்சியினராலும் முன்வைக்கப்படும் பிரச்சனைகளுக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கும். நாட்டின் நலன்கருதி இந்த கூட்டத்தொடரை ஒன்றிணைந்த கருத்தொற்றுமையுடன் நடத்தி முடிக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியதாகவும் அனந்த குமார் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!