ஆட்சி நடத்த தகுதி இருக்கிறதா? ரஜினி-கமலுக்கு ராமதாஸ் சவால்

ஆட்சி நடத்த தகுதி இருக்கிறதா என்பதை அன்புமணியுடன் மேடையில் விவாதித்து ஜெயித்து காட்டவேண்டும் என்று ரஜினி, கமலுக்கு ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.

பா.ம.க.வின் 30-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை அடையாறில் நடந்தது. கூட்டத்துக்கு வேளச்சேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அடையாறு வே.வடிவேல் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ஜி.வி.சுப்பிரமணியன், சகாதேவன், சிவக்குமார், ஜெனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியப்பன் வரவேற்றார்.

கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

மக்களின் உரிமைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது. ஊடகங்கள் மூலம் தான் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த வகையில் தொடர்ந்து அரசின் ஊழல்களை, தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும்.

இப்போது இரண்டு நடிகர்கள் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர் கட்சி ஆரம்பித்து பெயரும் சூட்டி விட்டார் (கமல்). இன்னொருவர் எப்போது கட்சியை தொடங்குவார் என்பது அவருக்கே தெரியாது (ரஜினி).

அரசியலுக்கு எல்லோரும் வரலாம். ஆனால் ஆளத்தகுதி இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

இரண்டு நடிகர்களும் ஒரே மேடையில் அன்புமணியுடன் விவாதத்துக்கு வரட்டும். அன்புமணி கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லட்டும். அல்லது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அன்புமணி பதில் சொல்லட்டும்.

நிச்சயமாக நான் சொல்வேன். அவர்கள் இருவரும் தங்கள் தோல்வியை ஒத்துக் கொண்டு எங்களுக்கு நடிக்கும் திறமை உண்டு. ஆனால் ஆளும் திறமை அன்புமணியிடம்தான் உள்ளது. அவரே ஆட்சிக்கு வரட்டும் என்று சொல்லி விடுவார்கள்.

ஆளத் தகுதியானவர்கள் யார் என்று பொதுமேடையில் விவாதிக்க வேண்டும். இது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் நடக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் ஒரே கட்சி பா.ம.க. இந்தியாவில் 2 ஆயிரத்து 44 கட்சிகளும் தமிழகத்தில் 230 கட்சிகளும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக உள்ளன. இவைகளில் இருந்து மாறுபட்ட ஒரே கட்சி பா.ம.க.

ஆண்ட கட்சிகளை ஒதுக்குங்கள். எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். மாற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

சென்னை-சேலம் 8 வழி சாலைக்கு ரஜினி ஆதரவு என்கிறார். அதைப்பற்றி அவருக்கு என்ன தெரியும். சேலத்துக்கு ஏற்கனவே 3 வழிகள் உள்ளன. அந்த சாலைகளை விரிவுபடுத்தினால் போதும். விவசாய நிலங்களை அழித்து இந்த சாலை அமைக்க வேண்டும் என்று யார் கேட்டது? நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை. கிழக்கு கடற்கரை சாலையை கன்னியாகுமரி வரை 8 வழி சாலையாக விரிவுபடுத்துங்கள். யாரும் எதிர்க்கப் போவதில்லை. இதன்மூலம் தென் மாவட் டங்களும் வளர்ச்சி பெறும்.

3 சாலைகள் இருக்கும் ஊருக்கு புதிதாக ஒரு சாலை எதற்கு? அதுவும் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் சில இடங்களில் இந்த சாலை அமைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அதிசயம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கும்.

இந்த சாலையை அமைப்பதில் அப்படி என்ன எடப்பாடி ரகசியமோ தெரியவில்லை. திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்.

8 வழி சாலைக்கு எதிராக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடுவோம். இந்த சாலை வரப் போவதில்லை

தற்போது தமிழ்நாடு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறது. டாக்டர்களால்தான் காப்பாற்ற முடியும். ஆக்டர்களால் காப்பாற்ற முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, திலகபாமா, வடிவேல் ராவணன், ராமமுத்துக்குமார், வக்கீல் பாலு, மு.ஜெயராமன், வி.ஜெ.பாண்டியன், ஜமுனா கேசவன், ஈகை தயாளன், ரா.செ.வெங்கடேசன், வி.எஸ்.கோபு, டி.எஸ்.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!