தொடரும் ‘நீட்’ தற்கொலைகள்: சிக்கிய உருக்கமான தற்கொலை கடிதம்!

ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர், பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூரை சேர்ந்த மாணவர் முரளிகிருஷ்ணா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெறாததால், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத தயாராகி வந்துள்ளார். நீட் தேர்வு நெருங்கிவரும் நிலையில், நேற்று திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    
சீட் கிடைக்கவில்லை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அரசனட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபி. தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவரது மனைவி மோகனசுந்தரி. இவர்களுக்கு முரளி கிருஷ்ணா (18), கீர்த்திவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் முரளி கிருஷ்ணா கடந்தாண்டு பிளஸ் 2 முடித்துவிட்டு, நீட் தேர்வு எழுதினார். மதிப்பெண் குறைந்ததால் மருத்துவக்கல்வி பயில முடியவில்லை.

மன அழுத்தம்
இதையடுத்து மீண்டும் நீட் தேர்வு எழுத கடந்த ஓராண்டாக படித்து வந்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக நேரடி பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். நாடு முழுவதும் வருகிற 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு முரளி கிருஷ்ணாவுக்கும் ஹால் டிக்கெட் வந்துள்ளது. அவர், ஆன்லைனில் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அறைக்குள் சென்று
இந்த நிலையில் நேற்று மாலை முரளி கிருஷ்ணா, வீட்டிலிருந்த தனது அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரம் மகன் அறைக்குள் இருப்பதை கண்ட அவரது பெற்றோர் அவரை அழைத்துப் பார்த்துள்ளனர். அவர் பதில் கொடுக்காததால் கதவை தட்டியுள்ளனர். ஆனால் அவர் எந்த சப்தமும் கொடுக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர்.

போலீசார் கைப்பற்றிய கடிதம்
அறையினுள் முரளி கிருஷ்ணா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, முரளிகிருஷ்ணா தனது பெற்றோருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

உருக்கமான கடிதம்
முரளி கிருஷ்ணா தனது தாய்க்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ‘எனக்கு நீட் எக்சாம் கஷ்டமா இருக்கும்மா. என்னால நீட்ல நல்ல மார்க் எடுக்க முடியாது. என்ன மன்னிச்சிரும்மா. நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணேன். ஆனால் மெடிக்கல் சீட் வாங்குற அளவுக்கு என்னால ஸ்கோர் பண்ண முடியாது. நான் இந்த முடிவ எடுத்ததுக்கு என்ன மன்னிச்சிரும்மா. நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்ம்மா’ என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சோகம்
இதனையடுத்து மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சிப்காட் போலீசார் மாணவரின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், அதிக மதிப்பெண் எடுக்க முடியுமா என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!