கள்ளக்குறிச்சி வன்முறை: மாவட்ட ஆட்சியர் பணி இடமாற்றம்!


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மாணவி மரணத்தால் வன்முறை கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் ஸ்ரீமதி (வயது 17), அந்த பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த 13-ந்தேதி அங்கு மர்மமான முறையில் இறந்துபோனார். இது மாணவிகள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறியது.
    
ஆனால் சாவில் சந்தேகம் இருப்பதால் முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மாணவ அமைப்புகள் தொடர்ந்து பள்ளியின் முன்பிருந்து போராடி வந்தனர். ஆனாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்தனர். இந்த நிலையில் 17-ந்தேதி அங்கு வன்முறை வெடித்தது. பள்ளிக்குள் பலர் புகுந்து பஸ்களை தீவைத்து எரித்தனர். மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். சான்றிதழ்களுக்கும் தீ வைத்தனர். கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல தளவாடங்களை சிலர் எடுத்துச்சென்றுவிட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை
இந்த கலவரத்தை அடக்குவதற்கு போலீசார் பெரிதும் திணறினர். பின்னர் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு கலவரம் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்த மாணவியின் உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை
இந்த சூழ்நிலையில் இந்த சம்பவம் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வழியாக கலந்துகொண்டார். தலைமைச் செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் அமைதியை ஏற்படுத்த இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும், ஐகோர்ட்டின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:- வேளாண்மை கூடுதல் இயக்குநர் ஷ்ரவன்குமார் ஜடாவத், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக மாற்றப்படுகிறார். அந்த மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழிச்சாலை திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராகவும் அவர் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டையும் இடமாற்றம் செய்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி ஆணையிட்டுள்ளார். அதில், சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் பி.பகலவன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா
கள்ளக்குறிச்சியின் புதிய கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெலுங்கானா மாநிலம் நல்கோண்டா பகுதியைச் சேர்ந்தவர். 25.5.1989 அன்று பிறந்த அவர், 1.9.2014 அன்று தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சேர்ந்தார். மும்பை ஐ.ஐ.டி.யில் பி.டெக். படிப்பை முடித்துள்ளார். அவருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு சரளமாக பேச தெரியும்.

பகலவன்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக இன்று (புதன்கிழமை) பதவி ஏற்கவிருக்கும் பகலவன் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கோட்டார்பட்டி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர். எம்.ஏ. பொருளாதாரம் படித்தவர். 1998-ம் ஆண்டு துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வாகி தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக இருக்கும் இவர் டி.ஐ.ஜி. பதவி உயர்வு பட்டியலில் உள்ளார். வரும் ஜனவரியில் இவர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெறுவார். இவர் தமிழகத்தின் வட மாவட்டங்கள் பெரும்பாலானவற்றில் சூப்பிரண்டாக சிறப்பாக பதவி வகித்துள்ளார். கடலூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் பணியில் இருந்துள்ளார். சென்னையில் தியாகராயநகர், அடையாறு, பூக்கடை துணை கமிஷனராக பதவி வகித்துள்ளார். சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராகவும் இருந்துள்ளார். தற்போது திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பதவியில் இருந்த இவரை சவாலான பொறுப்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அரசு நியமித்துள்ளது. இவரது மனைவி சென்னை பத்திரப்பதிவு துறையில் உதவி ஐ.ஜி.யாக உள்ளார். ஒரு மகன், மகள் உள்ளனர்.
      


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!