அமைச்சுப் பதவி தேவையில்லை!

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில கட்டமைப்புகளை அமைக்க உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
    
சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்கும் போதே க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை. அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டால் பெரிய பாதிப்பு எமக்கு ஏற்படும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் போது கூட்டுப் பொறுப்புடைமை மற்றும் கடப்பாடு போன்றன இருக்கின்றது.

அதனடிப்படையில் அவர்கள் எமக்கு கூறுவதை நாம் செய்ய வேண்டி இருக்கும். செய்யாத இடத்தில் அதிலிருந்து வெளியேற வேண்டி வரும். பெரும்பான்மையானவர்கள் இருக்கும் போது சிறுபான்மையினருக்கு எந்த வகையில் அவர்கள் ஒரு செயற்பாட்டையும் செய்யமாட்டார்கள். பெரும்பான்மை மக்களுக்கு ஏற்றவாறே செயற்பட பார்ப்பார்கள்.

இதன் காரணமாக அமைச்சரவை சம்பந்தமாக நான் அவ்வளவாக மனதில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சம்பந்தமான சில கட்டமைப்புகளை அமைக்க உதவிகளை அரசாங்கத்திடம் இருந்து பெறவுள்ளேன்.

நான் வட மாகாண முதலமைச்சராக இருந்த போது முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க அனுமதி தரவில்லை. இன்னமும் அதே போல இருக்காமல் வடகிழக்கில் சட்ட ரீதியான நிதியத்தை ஏற்படுத்தி வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளைப் பெற்று அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். ஆகவே தற்போது அமைச்சுப் பதவியை நான் பெரிதாக கருதவில்லை என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!