தேசிய விளையாட்டு தினம்- விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய ஆக்கி விளையாட்டின் தலைசிறந்த வீரராக மேஜர் தியான்சந்த் கருதப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று தேசிய விளையாட்டு தினமாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையொட்டி விளையாட்டு ஆளுமைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தமது டுவிட்டர் பதிவில், தேசிய விளையாட்டுகள் தினம் மற்றும் மேஜர் தியான்சந்த் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சமீப ஆண்டுகளாக விளையாட்டுகள் மிக சிறந்தவையாக உள்ளன. இந்த நிலைமை தொடரட்டும். இந்தியா முழுவதும் விளையாட்டுக்கள் பிரபலமடையட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆக்கி வீரர் தியான் சந்த் உருசிலைக்கு விளையாட்டுத்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.நாங்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுகிறோம் ஆனால் அது ஒரு விளையாட்டு. தோல்வியும் வெற்றியும் அதன் ஒரு பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக், பாராலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிளில் எங்கள் விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினர். விளையாட்டு கொண்டாடப்பட வேண்டும். மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளை 250க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டு ஆணைய மையங்களில் நாங்கள் இன்று கொண்டாடுகிறோம் என்றும், விளையாட்டுத் துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் தெரிவித்துள்ளார்.



* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!