பிரதமரின் பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ திருவிழா கொண்டாட முடிவு!

பிரதமர் மோடியின் பிறந்த தினம் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்த தினத்தை ஆண்டுதோறும் சேவை தினமாக பா.ஜனதாவினர் கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பல்வேறு சேவைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இந்த ஆண்டும் பிரதமர் மோடியின் பிறந்த தினத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
    
குறிப்பாக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேற்றுமையில் ஒற்றுமை திருவிழாக்களை கொண்டாட முடிவு செய்துள்ளனர். மோடியின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோர் 2-ந்தேதி வரை இந்த விழா கொண்டாப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக, ஒரு மாநில பா.ஜனதா நிர்வாகிகள் வேறு மாநிலத்தின் மொழி மற்றும் கலாசாரத்தை ஒரு நாள் பின்பற்றுவார்கள் என கட்சித்தலைமை அறிவித்து உள்ளது.

மேலும் ரத்த தான முகாம்கள், குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டங்கள், தூய்மை நிகழ்வுகள் என பல்வேறு தொண்டு செயல்கள் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மாநில தலைவர்களுக்கு பா.ஜனதா தலைமை கடிதம் அனுப்பி இருக்கிறது. மேலும் இந்த நிகழ்வுகளை மேற்பார்வையிடுவதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் அருண் சிங் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!