“இது தான் எமது கட்சி செய்த தவறு”! புதிய கூட்டணி தொடர்பில் அறிவித்தார் நாமல்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மகிந்தவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் வைத்து நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், புதிய கூட்டணியை மகிந்த ராஜபக்சவின் தலைமையில் கட்டியெழுப்பவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன் வன்முறையை முன்னெடுப்பவர்கள், சமூக ஊடகங்களில் வன்முறையை தூண்டுபவர்கள் மீது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டத்தை பிரயோகித்திருந்தால், இன்று இதனை விட நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். எனினும், ரணில் விக்ரமசிங்க அதனை மேற்கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். 

எமது அரசியல் கட்சியின் பலம் நாம் எதிர்பார்க்காத வகையில் அழிக்கப்பட்டுள்ளது. அமைப்பு முறைமையை (System) மாற்றுவதாகக் கூறி ஆட்களை மாற்றியது தான் எமது கட்சி செய்த தவறு.
நாட்டின் பெற்றோரும், பிள்ளைகளும் ஒன்றிணைந்தால், அமைப்பு முறையில் மாற்றம் கண்ட நாட்டினை கட்டியெழுப்ப முடியும்.அவ்வாறான யுகத்திற்கு நாட்டைக் கொண்டு செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை பொதுஜன பெரமுன என்ற ரீதியில் பெற்றுத் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாமலுக்கு முக்கிய அமைச்சு பதவி

இதேவேளை நாமல் ராஜபக்சவுக்கு முக்கிய அமைச்சு பதவி வழங்கப்படும் என உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வளர்ந்து வரும் இந்த அடக்குமுறை சூழ்நிலையில், மக்கள் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலை மிகவும் கடுமையாக நிராகரித்தனர்.

குடும்ப அரசியலை வெறுப்புடன் நிராகரித்தனர். ஆனால் இப்போது நேற்று நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சர்களில் ஷசீந்திர ராஜபக்சவும் இடம்பெற்றுள்ளார் .பொதுவாக எனக்கு தெரிந்த ராஜபக்ச குடும்பத்தின் அதிகார அரசியலின் படி ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சு வழங்கினால் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சு பதவி நிச்சயம் வழங்கப்படும்.

அதுதான் அந்தக் குடும்பத்தின் அதிகார அரசியலின் வழக்கம். தற்போது ஷசீந்திர ராஜபக்சவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் நாமல் ராஜபக்சவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்க முயற்சிக்கின்றனர்.மீண்டும் அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இவர்கள் பழைய விளையாட்டையே விளையாட முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.