இந்திய வரலாற்றை மாற்றியமைத்த தந்தை – மகன்!

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக அடுத்த மாதம் பதவியேற்க உள்ள டி.ஒய்.சந்திரசூட், 2 ஆண்டு காலம் நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட், முன்னாள் தலைமை நீதிபதி ஒய்.வி சந்திரசூட்டின் மகன் ஆவார். நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் 1978ல் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1985ல் ஓய்வு பெற்றவர். அவர் எமர்ஜென்சி காலத்தில் அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர்.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அதிக ஆண்டுகள் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். “கிஸ்ஸா குர்சி கா” படம் தொடர்பான ஒரு வழக்கில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு ஒய்.வி.சந்திரசூட் தனது பதவிக் காலத்தில் சிறை தண்டனை விதித்தார். எமர்ஜென்சி காலத்தில் இந்தப் படத்தை இந்திய அரசு தடை செய்தது.

இந்த நிலையில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தந்தை, மகன் பதவி வகித்த சாதனை நிகழவுள்ளது. நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இருந்த போது அதிரடி தீர்ப்புகளை வழங்கியவர். அவர் தனது தந்தை வழங்கிய இரண்டு தீர்ப்புகளை ரத்து செய்தார். நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றவர். இளம் வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவரானார்.

1998 இல், அவர் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அவர் ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தில் சர்வதேச சட்டம் கற்பிக்கும் பேராசிரியராக இருந்தவர். 2000ஆம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், அங்கு அவர் 13 ஆண்டுகள் பணியாற்றினார். 2013ல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வழக்கமான நீதிமன்ற பணி நேரத்தை தாண்டி, இரவு வரை அமர்ந்து வழக்குகளின் கோப்புகளை ஆராய்ந்து முடித்துவிட்டு செல்பவராக உள்ளவர்.சபரிமலைக்குள் பெண்கள் நுழைய அனுமதி உள்பட பல முக்கியமான வழக்குகளில் வழங்கப்பட்ட முக்கியமான தீர்ப்புகளில் அவர் ஒரு பகுதியாக இருந்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!