தவறான சிகிச்சையால் பறிபோன இளம் வீராங்கனையின் உயிர்!

தமிழகத்தில் தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா இன்று உயிரிழந்தார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா(வயது 17). ராணிமேரி கல்லூரியில் படித்து வருகிறார், கால்பந்து போட்டியில் மாவட்ட மற்றும் மாநில அளவில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் மூட்டுவலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறி அறுவைசிகிச்சை செய்துள்ளனர். ஆனால் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்வுகள் ஏதும் இல்லாமல் இருந்ததால் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிரியாவை பரிசோதித்து பார்த்த போது, வலது காலில் ரத்தம் உறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அதில் தொற்றுகள் அதிகம் இருந்ததால் உடல் முழுவதும் பரவாமல் இருக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலதுகாலின் முழங்கால் பகுதிக்கு கீழ் அகற்றப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரியா இன்று உயிரிழந்துள்ளார், மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என பிரியாவின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரியா கடைசியாக வாட்ஸ்அப்பில் வைத்த பதிவு வெளியாகியுள்ளது.
அதில், நான் சீக்கிரமே ரெடி ஆகி கம்பேக் கொடுப்போன், எதையும் நினைக்காதீர்கள், நான் மாஸ் என்ட்ரி கொடுப்பேன், என்னுடைய கேம் என்னை விட்டு போகாது, சீக்கிரம் வருவேன்னு நம்பிக்கையோடு இருங்க லவ் யூ ஆல் என தெரிவித்துள்ளார். பிரியாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மருத்துவர்கள் கட்டுகட்டுவதில் கவனக்குறைவாக இருந்ததால் பிரியாவுக்கு ரத்தஓட்டம் தடைபட்டிருந்தது, இது அரசின் கவனத்துக்கு வந்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2வது அறுவைசிகிச்சைக்கு பின் பிரியா நலமுடனே இருந்தார், அவருக்கு பெங்களூருவில் உள்ள பேட்டரி காலை பொருத்துவது என திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் ரத்த ஓட்டம் தடைபட்டிருந்ததால் சிறுநீரகம், இதயம் என ஒவ்வொன்றாக உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பிரியா உயிரிழந்துள்ளார். பிரியாவின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!