கனேடிய பசுமை கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான எலிசபெத் மே!

கனேடிய பசுமை கட்சியின் தலைவராக எலிசபெத் மே மீண்டும் வெற்றி பெற்றதற்கு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாழ்த்து தெரிவித்துள்ளார். கனேடிய பசுமைக் கட்சியின் தலைவர் பதவிக்காக நடந்த தேர்தலில் எலிசபெத் மே வெற்றி பெற்றார். எலிசபெத் மே மற்றும் ஜொனாதன் பெட்னோல்ட் இருவரும் போட்டியிட்ட நிலையில், கட்சியின் 22,000 உறுப்பினர்களில் 40 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்தனர்.

இதில் 4,666 வாக்குகள் பெற்ற எலிசபெத் மே மீண்டும் வெற்றி பெற்றார். தோல்வியடைந்த பெட்னோல்ட் துணை தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் முதன் முதலில் தலைவராக பதவியேற்ற எலிசபெத் மே, 2019ஆம் ஆண்டு வரை தலைமை பொறுப்பில் செயல்பட்டார். இந்த நிலையில் அவர் இரண்டாவது முறையாக மீண்டும் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘இது கொஞ்சம் தேஜாவு போன்றது என்றாலும், அதே போன்ற நிலை அல்ல. நான் இங்கே தனியாக இல்லை, பந்தயத்தில் இளைய வேட்பாளருமான எனது கூட்டாளியுடன் இருக்கிறேன். கருத்து வேறுபாடு காலம் எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் வாக்குப்பதிவு அளவைக் கண்டு நான் ஏமாற்றமடைந்தேன் என்று தான் கூற வேண்டும்’ என தெரிவித்தார்.

அதேபோல் பெட்னோல்ட் கூறுகையில், ‘இந்தக் குழு தொடர்ந்து சிறப்பாக இணைந்து செயல்படும். நாங்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்’ என தெரிவித்தார்.இந்த நிலையில், பிரதமர் ட்ரூடோ வெற்றி பெற்ற எலிசபெத் மே மற்றும் ஜொனாதன் பெட்னோல்ட் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பசுமைக் கட்சியின் எலிசபெத் மே மற்றும் ஜொனாதன் பெட்னோல்ட்டிற்கு வாழ்த்துக்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடவும் உங்கள் இருவருடனும் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். நாம் ஏற்கனவே செய்த முன்னேற்றத்தை தொடர்ந்து கட்டியெழுப்புவோம்’ என தெரிவித்துள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!