நான் தலைவராகி விடுவேன் என சிலருக்கு அச்சம்-தயாசிறி ஜயசேகர

தனிப்பட்ட ரீதியிலான பெறாமையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளுக்கு காரணம் என அந்த கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளை சங்க குழுக்களை வலுப்படுத்தி, கட்சியை மறுசீரமைக்கும் போது, கட்சியின் தலைவர் பதவிக்கு என்னை நியமிக்கும் முயற்சி நடப்பதாக சிலர் அஞ்சுகின்றனர்.
நான் ஒரு போதும் தலைவரை காலைப்பிடித்து இழுத்து, பதவியை பெறும் நபர் அல்ல. நான் கட்சியின் தலைவராக வந்து விடுவேன் என சிலர் பயப்படுகின்றனர். தனிப்பட்ட ரீதியிலான அரசியல் பொறமை மற்றும் ஆத்திரம் காரணமாகவே கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.நகத்தில் கிள்ளி எறிய வேண்டியவை இறுதியில் கோடாரியில் வெட்டும் நிலைமைக்கு சென்றன. அப்படியான நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சிகள் கூடும் முதல் சந்திப்பில், முன்னணியின் செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்படும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவிக்கு ஒருவரை பரிந்துரைக்கும் உரிமை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு புத்துயிர் ஊட்டுவதை கண்டு அச்சும் அரசாங்கத்திற்கு பொதி சுமக்கும் நபர்களுக்கே திலங்க சுமதிபாலவின் பெயர் பரிந்துரைக்கப்படுவது பிரச்சினையாகி இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!