இலங்கையை ஏமாற்றிய சர்வதேச நாணய நிதியம் – இந்தியாவிடம் தஞ்சமடையும் ரணில் அரசு

இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு வாய்ப்பு இல்லை என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அண்டை நாடான இந்தியாவிடம் இருந்து மற்றொரு கடனை நாட வேண்டியிருக்கும் என்று அரசாங்கத்தின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனை புதுடில்லியில் திடீரென சந்தித்ததற்கு இதுவே முக்கிய காரணம் என தெரிவிக்கப்படுகிறது.தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு குறித்து, உயர் ஸ்தானிகர் மொரகொட கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைச்சர் சீதாராமனுடன் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவர்களுக்கிடையிலான மிக நெருக்கமான சந்திப்பானது பொருளாதார மற்றும் நிதி உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் என இந்திய ஊடகங்கள் சந்திப்புக்குப் பின்னர் தெரிவித்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய கலந்துரையாடல்கள் மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய நிலை குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட அமைச்சர் சீதாராமனிடம் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!