உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ள 3 ஆசிய நாடுகள்-இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச குடியுரிமை மற்றும் வதிவிட ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய ஜப்பான் உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ள நாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஆசியாவின் 03 நாடுகள் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்டுள்ள வரிசையில் முன்னணியில் உள்ளன. ஹென்லி & பார்ட்னர்ஸின் அறிக்கைக்கு அமைய, ஜப்பானிய மக்கள் உலகெங்கிலும் 193 நாடுகளுக்கு விசா இன்றியும் On Arrival  விசாவை பெற்று செல்ல முடியும். சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ள மக்கள் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.

கோவிட் தொற்று நோய் பரவலுக்கு பின்ன ஆசிய-பசிபிக் பிராந்தியம் மீண்டும் சுற்றுலாவுக்கு திறக்கப்படுவதால், இந்த பிராந்திய மக்கள் மீண்டும் பயண சுதந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் அண்மைய வெளியீட்டின் அடிப்படையில் சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் படி சர்வதேச சுற்றுலா கோவிட் தொற்றுக்கு பின்னர் தற்போது 75 வீதமாக உள்ளது.

03 ஆசிய நாடுகளுக்கு அடுத்து அதிக சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் முன்னுரிமைப் பட்டியலில் பல ஐரோப்பிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஜேர்மனி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இன்றி சுதந்திரமாகச் செல்லலாம், இந்த நாடுகளை தவிர பின்லாந்து, இத்தாலி மற்றும் லக்சம்பேர்க் நாடுகளின் கடவுச்சீட்டுக்களை வைத்திருப்போர் 189 நாடுகளுக்கு விசா இன்றி சுதந்திரமாக செல்ல முடிடியும்.

ஒஸ்ரியா, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஐந்தாவது இடத்திலும், பிரான்ஸ், அயர்லாந்து, போத்துக்கல் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் 6வது இடத்திலும் உள்ளன.பெல்ஜியம், நோர்வே, சுவிட்சர்லாந்து மற்றும் செக் குடியரசு ஆகியவற்றுடன் நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 7வது இடத்தில் உள்ளன.

ஆப்கானிஸ்தான் மீண்டும் பட்டியலில் கீழ் மட்டத்தில் இருப்பதுடன் முன்கூட்டியே விசா அனுமதியின்றி நாட்டுக்குள் வருவதற்கு 27 நாடுகள் மாத்திரமே ஆப்கானிஸ்தான் கடவுச்சீட்டை கொண்டுள்ள மக்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

இந்த பட்டியலுக்கு அமைய இலங்கை 100வது இடத்தில் இருப்பதுடன் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள ஒருவர் 42 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது On Arrival  விசா அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என  ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!