கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவல் கண்டுபிடிப்பு!

கேரளாவின் கோழிக்கோட்டில் அரசு கோழிப்பண்ணை இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோழிகள் உள்ளன. இங்கு சுமார் 1,800 கோழிகள் திடீரென இறந்தன. உடனடியாக அவற்றின் மாதிரிகளை சேகரித்து மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடந்த பரிசோதனையில், பறவைக்காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்திருப்பது கண்டறியப்பட்டது.
    
இது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு தீவிரம் இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அதன்படி அந்த பண்ணை மற்றும் அருகில் உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகளை கொன்று அழித்தல் மற்றும் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி உள்ளன.

மேலும் மாநிலத்தில் தொற்று பரவாமல் இருப்பதற்காக பல்வேறு துறையினர் உதவியுடன் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக மாநில கால்நடைத்துறை மந்திரி சிஞ்சு ராணி கூறியுள்ளார். குறிப்பாக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவசர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!