முக அங்கீகாரம், கருவிழி ஸ்கேனை வங்கிகள் வரம்புடன் பயன்படுத்த அனுமதி!

மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
    
மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை (ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை) மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சரிபார்ப்பு சோதனை கட்டாயமில்லை. ஆனால், வரி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அரசு அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவை வங்கிகளுடன் பகிரப்படாத சந்தர்ப்பங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வங்கிகள் முக அங்கீகாரத்தை பயன்படுத்துவது தொடர்பாக பாதுகாப்புக்கான பிரத்யேக சட்டங்கள் இல்லாதபோது இதுபோன்ற அனுமதி ஒருவரின் தனியுரிமைக்கு பாதிப்பை உருவாக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், புதிய தனியுரிமைச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதில் உறுதியாக உள்ளதாக மத்திய அரசு இவ்வாண்டின் தொடக்கத்தில் தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!