விக்னேஸ்வரனின் மனு மீதான விசாரணை செப்ரெம்பருக்கு ஒத்திவைப்பு

வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனைப் பதவி நீக்கம் செய்த தமது உத்தரவை இடைநிறுத்தி, மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வட மாகாண முதலமைச்சர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு செப்ரெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குழாம், அவரைப் பதவி நீக்கம் செய்த உத்தரவை இடைநிறுத்தி, தொடர்ந்தும் அமைச்சராகப் பதவி வகிக்கிறார் என்றும் இடைக்கால உத்தரவை வழங்கியது.

இந்த இடைக்கால உத்தரவு அதற்குப் பின்னர் இரண்டு தவணைகளில் நீடிக்கப்பட்டது.

இந்த இடைக்கால உத்தரவை செயற்படுத்த மறுத்து வரும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதையடுத்தே, வரும் செப்ரெம்பர் மாதம், 05 ஆம் நாள் வரை இந்த மனு மீதான விசாரணையை நீதியரசர்கள் ஒத்திவைத்தனர்.

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ள நிலையில், வடக்கு மாகாண அமைச்சரவையை கூட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!