கோத்தா கொலை முயற்சி வழக்கு – 12 ஆண்டுகளின் பின் இந்துக் குருக்கள் விடுதலை

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்துக் குருக்கள் ஒருவரை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

2006ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் கோத்தாபய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கினார் என்ற குற்றச்சாட்டில், சிறீஸ்கந்தராஜ சர்மா என்ற இந்துக் குருக்கள் கைது செய்யப்பட்டார்.

கோத்தாபய ராஜபக்ச கொலை முயற்சி, அவரது பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று படையினர் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்தார் என்பன உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, சிறீஸ்கந்தராஜ சர்மாவுக்கு எதிரான முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அவரது ஒப்புதல் வாக்குமூலம் தவிர வேறு ஆதாரங்கள் எதையும் சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்க முடியவில்லை.

ஒப்புதல் வாக்குமூலத்தை அவர் சுயமாக வழங்கவில்லை என்று கூறிய நிலையில், அவருக்கு எதிராக வேறு சாட்சியங்களை அரச தரப்பு முன்வைக்க முடியாததால், இந்த வழக்கில் இருந்து சிறீஸ்கந்தராஜ சர்மாவை முழுமையாக விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபயகோன் தீர்ப்பளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!