ஓய்வு பெறும் சைலேந்திர பாபு ஐபிஎஸ்: தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திர பாபுவின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த டிஜிபி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகத்தின் டிஜிபியாக திரிபாதி இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடையவிருந்த நிலையில் அடுத்த டிஜிபியாக தமிழக அரசு யாரை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
    
இதற்கு காரணம் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தமிழகத்தின் தலைமைச் செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள், சென்னை மாநகராட்சி கமிஷனர், மாவட்ட ஆட்சியர்கள், துறை கமிஷனர்கள், துறையின் செயலாளர்கள் என அதிரடி மாற்றங்களை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இதனால் அவரது அரசு யார் டிஜிபியாக வர விரும்பும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் சைலேந்திர பாபு ஐபிஎஸ் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க பல்வேறு யுத்திகளை கையாண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் போதை பொருட்கள் கடத்தல், ரவுடிகள் அட்டகாசம், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை உள்ளிட்டவைகளை தடுக்கும் நடவடிக்கைகளில் சைலேந்திர பாபு அதிகம் கவனத்தை செலுத்தினார்.

இதற்காக பல்வேறு ஆபரேஷன்களை செயல்படுத்தினார். அது போல் சைபர் கிரைம் மோசடிகளை தடுக்கவும் அவர் தனது திறமையை காட்டினார். தற்போது வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் நடைபெறும் கொள்ளைகளை தடுக்க மறைமுக கேமரா வைப்பது தொடர்பான ஆலோசனையிலும் சைலேந்திர பாபு ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதால் சைபர் கிரைம் குற்றங்கள், ஆன்லைன் மோசடி, மேட்ரிமோனி மோசடி செய்வது உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வை வீடியோவாக வெளியிட்டு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவரது பணிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. பொதுவாக இது போன்ற உயர் பதவிகளை வகிப்போர் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சீனியாரிட்டி அடிப்படையில் அடுத்து அந்த பதவிக்கு யாரை கொண்டு வரலாம் என்பதை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அந்தந்த மாநில அரசு அனுப்பி வைக்கும். அது போல் சைலேந்திர பாபு ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அதாவது வரும் மே மாதம் பதவி மூப்பு அடிப்படையில் 3 பேரை தமிழக அரசு தேர்வு செய்து மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும்.

அந்த 3 பேரில் ஒருவரை மத்திய உள்துறையே தேர்வு செய்து அவரை அந்த பதவிக்கு அமர்த்தலாம் என தமிழக அரசை அறிவுறுத்தும். இல்லாவிட்டால் அந்த 3 பேரில் யாராவது ஒருவரை தமிழக அரசே தேர்வு செய்து கொள்ளலாம் என சாய்ஸையும் கொடுக்கும். எனவே இந்த இரண்டில் எது நடக்க போகிறது என தெரியவில்லை. ஆயினும் தமிழக அரசு அடுத்த டிஜிபியாக சீனியாரிட்டி அடிப்படையில் சென்னை காவல் துறை கமிஷனராக உள்ள சங்கர் ஜிவால், முன்னாள் கமிஷனரும் காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் ஏ.கே.விஸ்வநாத், ஊர்க் காவல் படை தலைவராக உள்ள பிரஜ் கிஷோர் ரவி (பி.கே.ரவி) ஆகிய மூவரின் பெயர்களை பரிந்துரைக்கும் என தெரிகிறது.

இவர்களில் பி.கே.ரவி தீயணைப்பு துறை இயக்குநராக இருந்த போது ஏதோ ஒரு காரணத்திற்காக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு பின்னர் அவர் ஊர் காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி அந்தஸ்தில் உள்ள ரவி திடீரென காத்திருப்போர் பட்டியலில் இருந்தது காவல் துறையினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. எனவே அவரை டிஜிபியாக நியமிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த பட்டியலில் இருக்கும் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாத் ஆகிய இருவரில் யாருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்களில் சங்கர் ஜிவாலை எடுத்துக் கொண்டால், சென்னை மாநகராட்சியில் நடைபெறும் வங்கி, ஏடிஎம் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடித்து சிறப்பாக செயல்படுகிறார் என்ற பெயர் உள்ளது. தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கையாள்கிறார். இவர் முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கிறார். பல்வேறு காவலர்களுக்கு மருத்துவ உதவி, பண உதவிகளையும் செய்து வருகிறார். மேலும் அவரது பணி வரலாற்றில் ஒரு கரும்புள்ளி கூட இல்லாத அளவுக்கு நேர்மையானவர். எனவே இவருக்கு வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது.

அது போல் ஏ.கே.விஸ்வநாத் சென்னை கமிஷனராக இருந்த போது மூன்றாவது கண் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தார். அதன்படி ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றம் நடந்து மிகவும் குறைந்த நேரத்தில் , நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வந்தனர். இந்த மூன்றாவது கண் திட்டத்தை பலர் வரவேற்றனர். அது மட்டுமில்லாமல் ஏ.கே. விஸ்வநாத் தமிழகத்தை சேர்ந்தவர். இவரது பணி வரலாற்றை எடுத்து பார்த்தாலும் ஒரு இடத்தில் கூட கரும்புள்ளி கிடையாது. அனைத்து தரப்பிலும் இவருக்கு நற்பெயரே இருக்கிறது. இதனால் இவரை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கலாம் என்ற பேச்சும் இருக்கிறது. எனவே தமிழகத்தின் அடுத்த டிஜிபியாக முதல்வர் ஸ்டாலின் யாரை தேர்வு செய்வார், தனக்கு நெருக்கமான சங்கர் ஜிவாலையா அல்லது தமிழகத்தை சேர்ந்த ஏ.கே. விஸ்வநாத்தையா என்பது வரும் மே மாதம் தெரியவரும்.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்பு ஓய்வு பெறப்படவுள்ளதை அடுத்து அடுத்த தலைமைச் செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் தமிழக தலைமைச் செயலாளர், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆகிய இரு பதவிகளும் முக்கியமானவை என்பதால் அந்த பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!