வரவிருக்கும் கோடை வெப்பம் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை!

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நடப்பு ஆண்டில் குளிர்காலத்தில் கடுமையான உறைபனி சூழல் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் பனிப்பொழிவு காணப்பட்டது. டெல்லி, அரியானா உள்ளிட்ட வடஇந்திய பகுதிகளில் கடும் குளிரால் ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்தது. இந்த கடுங்குளிர் ஒருபுறம் மக்களை வாட்டியபோதும், வருகின்ற கோடை காலம் மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
    
இதுபற்றி மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம். ராஜீவன் கூறும்போது, 2023-ம் ஆண்டில் கோடை கடுமையாக இருக்கும் என கூறியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாகம் (என்.ஓ.ஏ.ஏ.) அமைப்பு கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பரில் எல் நினோ தாக்கம் 58% கூடுதலாக இருக்கும் என தெரிவித்து உள்ளது.

புவி வெப்பமடைந்து, அதனால் கடல் நீர்மட்டம் உயர்வதும், அதனை சமன்படுத்த இயற்கை சுழற்சிகளால் ஏற்படும் மாற்றமே எல் நினோ என அழைக்கப்படுகிறது. இது அனைத்து வித நில அமைப்புகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும் சக்தி பெற்றவை. இதற்கு சான்றாக அமெரிக்காவின் பாலைவன பகுதிகள், சென்னை பெரு நகர பகுதிகள் என உலகில் பல பகுதிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த எல் நினோ தாக்கத்தினால், குறைவான பருவகால மழைப்பொழிவு ஏற்பட கூடும். எனினும், கிடைத்த தகவலை கொண்டு இப்போதே துல்லியமுடன் அதனை கணித்து விட முடியாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன்படி, பருவகாலத்தில் எல் நினோவின் பாதிப்புகள் பற்றி வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிடைக்க பெறும் நம்பத்தக்க புகைப்படங்களால் அறிய முடியும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர். எனினும், ஸ்கைமெட் வெதர் என்ற வானிலை ஆய்வு மைய துணை தலைவர் மகேஷ் பலாவத் கூறும்போது, இந்த வசந்த கால பருவத்தில் வெப்பநிலை மோசமடையாது என்றபோதிலும், பிப்ரவரி மற்றும் மார்ச்சில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடை கால வெப்பநிலை மிக அதிக அளவில் இருக்கும் என தெரிவித்து உள்ளனர். கடந்த ஆண்டு இந்தியாவின் 9 நகரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசையும் கடந்து இருந்தது. நாட்டின் வடக்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை சூழல் காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!