வாடிக்கையாளர்களுக்கு பிரித்தானிய பல்பொருள் அங்காடிகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள்!

பிரித்தானியாவில் பழங்கள் மற்றும் காய்களிகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களுக்கு பல்பொருள் அங்காடிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தக்காளி, மிளகுத்தூள், வெள்ளரிகள், கீரை, சாலட் பைகள், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் மற்றும் ராஸ்பெர்ரி ஆகியவற்றுக்குள் மூன்று மட்டும் என வரம்பு விதிக்கப்பட்டுள்ளது என்று அஸ்தா இன்று அறிவித்தது.
    
இதேவேளை, புதன்கிழமை முதல் தக்காளி, வெள்ளரிகள், கீரை, மிளகுத்தூள் ஆகியவற்றில் ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு பொருட்கள் மட்டும் என வரம்புகளை அறிமுகப்படுத்துவதாக மோரிசன்ஸ் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, வேறுபல பல்பொருள் அங்காடிகளும் இதே நிலை அமுலுக்கு கொண்டுவர வாய்ப்பிருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும், ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் மோசமான வானிலை, போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் மோசமான விளைச்சல் ஆகியவற்றின் காரணமாக இப்பிரச்சனை உருவாகியுள்ளதாக நம்பப்படுகிறது.

இருப்பினும் அடுத்த சில வாரங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் எனவும், மக்கள் அச்சத்தில் தேவைக்கு அதிகமாக வாங்கிக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் சில பல்பொருள் அங்காடிகளில் குறிப்பிட்ட பொருட்கள் கையிருப்பு இல்லை என்பதாக கூறப்படுவதை மக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், குறிப்பிட்ட பொருட்கள் தெற்கு ஸ்பெயின் மற்றும் வட ஆப்பிரிக்கா பகுதிகளில் பயிரிடப்படுவதாகவும், அங்கிருந்து கொண்டுவருவதில் சிக்கல் நீடிப்பதாகவும் சில பல்பொருள் அங்காடிகள் விளக்கமளித்துள்ளன.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஒரு வாடிக்கையாளருக்கு மூன்று எண்ணிக்கை மட்டுமே என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அனைவரும் பயன்பெறும் சூழல் உருவாகும் என தெரிவித்துள்ளனர். மொராக்கோவில் உள்ள விவசாயிகளும் சப்ளையர்களும் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களாக கடும் குளிர் வெப்பநிலை, கனமழை, வெள்ளம் மற்றும் கப்பல் போக்குவரத்து ரத்து என போராட வேண்டியிருந்தது. இதனால் பிரித்தானியாவுக்கு வரும் பழங்களின் அளவு பாதிப்புக்கு உள்ளானது என்கிறார்கள்..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!