தமிழத்திலேயே முதல் முறையாக ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ!

சென்னையில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை பெண் எஸ்.ஐ ஒருவர் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துணிச்சலாக செயல்பட்ட பெண் உதவி ஆய்வாளர் மீனாவிற்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது. சென்னை அயனாவரம் பகுதியில் கடந்த 20 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் உதவி ஆய்வாளர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.

உடனே உதவி ஆய்வாளர் சங்கர் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றபோது, இரும்புக் கம்பியால் அவரை தாக்கி விட்டு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 2 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதில் ரவுடி பெண்டு சூர்யா மட்டும் தலைமறைவாக இருந்த நிலையில், திருவள்ளூரில் உள்ள அக்கா வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைக்கவே, பெண் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான 4 பேர் கொண்ட தனி படை போலீசார் சுற்றி வளைத்து பெண்டு சூர்யாவை கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து பெண்டு சூர்யாவை அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கொண்டிருந்த போது, அயனாவரம் நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வந்த சமயம் திடீரென பெண்டு சூர்யா போலீசாரை கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடமுயன்றதாக கூறப்படுகிறது.

உடனே சுதாரித்து கொண்ட போலீசார், பெண்டு சூர்யாவை விரட்டி பிடிக்க முயற்சித்த சமயம் குற்றவாளியை பிடிக்கவும், காவலர்களை பாதுகாக்கவும் பொருட்டு பெண் உதவி ஆய்வாளர் மீனா தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 10 அடி தூரத்தில் இருந்த சூர்யாவின் வலது முழங்காலில் சுட்டு பிடித்துள்ளார்.
இதனால் காயமடைந்த பெண்டு சூர்யா தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண் உதவி ஆய்வாளர் மீனா துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த சம்பவம் பலராலும் பேசப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்திலேயே ஒரு பெண் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தி குற்றவாளியை பிடித்த சம்பவம் இதுவே முதல் முறை என்பதால், பெண் உதவி ஆய்வாளர் மீனா குறித்த செய்தி வேகமாக பரவி வருவதோடு, அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!