இந்தியாவையே கலக்கும் தமிழகத்து பெண்!

தமிழகத்தை சேர்ந்த ராதா வேம்புவின் சொத்து மதிப்பு தெரியுமா? அவர் இந்தியாவின் பணக்காரர்களில் 3ஆவது பெண் ஆவார். பெண்கள் கல்வி கற்பதே ஒரு காலகட்டத்தில் குதிரைக் கொம்பாக இருந்த நிலையில் இன்று பெண்கள் ஆண்களுக்கு சமமாக முன்னேறி வருகிறார்கள். இன்னும் அவர்களை விட ஒரு படி மேலேயும் போய் நிறைய பேருக்கு வேலைவாய்ப்புகளையும் பெண்கள் வழங்கி வருகிறார்கள்.
    
இதைத்தான் பெண்கள் படித்தால் அது சமூகத்திற்கே நன்மை அளிக்கும் என அந்த காலத்தில் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். எத்தனையோ நிறுவனங்களில் ஒரு சூப்பர்வைசர் எனும் ஆளுமை பதவிகளுக்கு கூட பெண்களை நியமிக்க தயங்கி வந்த நிலையில் தற்போதோ பெண்கள் ஒரு நிறுவனத்தின் நிறுவனத் தலைவராகவும் தலைமை நிர்வாக இயக்குநராகவும் பதவி வகிக்கிறார்கள்.

இந்த வெற்றி அந்த மகளிர்களின் உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாகும். அந்த வகையில் ஜோஹோ நிறுவனத்தை இன்று உயர்த்தியுள்ள ராதா வேம்புவை பற்றி பார்க்கலாம். 1972 ஆம் அண்டு பிறந்தவர் ராதா வேம்பு. இவரது தந்தை சாம்பமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெனோவாக பணிபுரிந்து வந்தார். ராதா வேம்புடன் பிறந்தவர்கள் 4 சகோதரர்கள், ஒரு சகோதரி ஆவர்.

சென்னை ஐஐடி நிறுவனத்தில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றார் ராதா வேம்பு. இதையடுத்து ராஜேந்திரன் தண்டபாணி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஆதித்யா ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். 1996ஆம் ஆண்டு, படித்துக் கொண்டிருக்கும்போதே, ராதாவின் சகோதரர்கள் ஸ்ரீதர் வேம்பு மற்றும் சேகர் வேம்பு ஆகியோருடனும் பிற நபர்களுடனும் இணைந்து அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தை நிறுவினார். ஶ்ரீதர் வேம்பு பலருக்கும் அறிமுகமானவர். அண்மையில் பத்மஶ்ரீ விருதும் பெற்றவர்.

ஜோஹோவில் ராதா வேம்பு மெயில் தயாரிப்பு மேலாளராக (Zoho Mail’s Product Manager) பணியாற்றி வருகிறார். இவருக்கு கீழ் 250 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஆஸ்டினில் 375 ஏக்கர் பரப்பளவில் இந்த ஜோஹோ நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. ஜோஹோவின் முக்கிய அலுவலகங்களில் ஒன்றாக விளங்கும் சென்னை அலுவலகத்தில்தான் ராதா வேம்பு பணியாற்றி வருகிறார்.

இந்த நிறுவனம் 9 நாடுகளில் உள்ளது. 6 கோடிக்கும் மேற்பட்டோர் ஜோஹோவின் மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். கிளவுட் அடிப்படையிலான வணிக மென்பொருள் இங்கு டிசைன் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சொந்த உழைப்பால் முன்னேறியுள்ளார் 50 வயதான ராதா வேம்பு. இவர் இந்தியாவின் மூன்றாவது பணக்கார பெண்ணாவார். அது போல் சொந்த உழைப்பால் முன்னேறியவர்களின் பட்டியலில் நம்பர் ஒன்னாக இவர் இருந்து வருகிறார்.

இவரது சொத்து மதிப்பு ரூ 21 ஆயிரம் கோடியாகும் (2.6 கோடி டாலர்). ராதா வேம்பு வேளாண்மை தன்னார்வல அமைப்பான ஜானகி ஹைடெக் ஆக்ரோ பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் உள்ளார். அதுபோல் ஹைலேண்ட் வேலி கார்பரேஷன் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநராகவும் இருந்து வருகிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் உலகின் பணக்காரர்களில் 1176 ஆவது இடம் ராதா வேம்புக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!