மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே புதிய சட்டம்!

மனித உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் இல்லை. மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
    
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போதே அமெரிக்க தூதுவரிடம் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இந்த சந்திப்பின் போது அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பிலும் , மறுசீரமைப்புக்கள் ஊடாக இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றங்கள் தொடர்பிலும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தூதுவருக்கு விளக்கமளித்தார்.

நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துவதற்கான நோக்கம் சாதாரண மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவேயாகும் என்றும் , மனித உரிமைகள் மீறப்படுவதற்கான சந்தர்ப்பம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் , பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய அமெரிக்க தூதுவர், பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறுகிய காலத்திற்குள் மீண்டெழுவதற்கான கட்டத்தை அடைந்துள்ளமைக்கு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.சுச்சல்க் ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நிறுவப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலும் , இந்த ஆணைக்குழுவை நிறுவுவதற்காக தென் ஆபிரிக்காவின் அனுபவப்பகிர்வுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளைப் போன்றே, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் தென் ஆபிரிக்கா ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் உறுதியளித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!