ராஜபக்ஷர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதே எம் சபதம்!

ஊழல் , மோசடி மிக்க இந்த அரசாங்கத்துடன் நாம் ஒருபோதும் இணையப் போவதில்லை. எம்மில் எவரும் இரட்டை நிலைப்பாட்டில் இல்லை. மாறாக இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பவர்கள் தாராளமாக விலகிச் செல்லலாம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
    
ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மற்றும் பதுளையில் வெற்றிகரமாக இரு மே தினக் கூட்டங்களை நடத்தியுள்ளது. உழைக்கும் தொழிலாளர்கள் செறிந்து வாழும் மலையகத்திலும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாம் பதவிகளுக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல. எமது அரசியலின் நோக்கம் முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதேயாகும்.

தற்போது ஊழல் , மோசடியாளர்களே ஆட்சியமைத்துள்ளனர். அதன் காரணமாகவே உள்நாட்டுக்கு அப்பால் சென்று , வெளிநாடுகளிடம் இலஞ்சம் கோரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எமக்கு ஒரு போதும் இவ்வாறான அரசாங்கத்துடன் இணையும் எண்ணமில்லை. மாறாக ஐக்கிய மக்கள் சக்தியுடனேயே நாம் அரசாங்கத்துக்குச் செல்வோம்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் அவரது ஆட்சி காலத்தில் இரு சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கின்றார். ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மக்களுக்கான சலுகைகளை நீக்கவோ , நிவாரணங்களை வழங்காமலோ இருக்கவில்லை.

ஆனால் தற்போதைய அரசாங்கம் அவ்வாறல்ல. எனவே தான் நாணய நிதிய ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் நாம் பங்கேற்கவில்லை. உலகில் முதன்மையான நாடாக இலங்கையை மாற்றுவதே எமது இலக்காகும். எனவே இன , மத பேதமற்ற தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கம் எம்மால் அமைக்கப்படும்.

இம்முறை மே தினத்தில் எமது சபதம் யாதெனில் ராஜபக்ஷர்களைப் பாதுகாக்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதேயாகும். அத்தோடு தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மக்களுக்கு சாதகமானதாக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் புதுப்பிக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!