புலம்பெயர் மக்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமை நிராகரிக்கப்படும்: ட்ரம்ப் சூளுரை!

எதிர்வரும் 2024ல் தாம் ஜனாதிபதியாக தெரிவானால் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கான பிறப்புரிமை குடியுரிமையை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி டொலாண்டு ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்.
    
ஜனாதிபதியாக தெரிவாகும் முதல் நாள் முதல் கையெழுத்து அதுவாகவே இருக்கும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்த இடத்தைப் பொருட்படுத்தாமல் குடியுரிமை மறுக்கப்படும் என்றார்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ஜோ பைடனை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், ஜோ பைடன் நமது நாட்டின் மீது சட்டவிரோத வெளிநாட்டு படையெடுப்பை அனுமதித்துள்ளார், இதன் மூலம் நமது எல்லைகளைத் தாண்டி ஏராளமான சட்டவிரோத குடியேறிகள் ஒரு புயல் போல வர அனுமதித்துள்ளார். மில்லியன் கணக்கான இந்த சட்டவிரோத குடியேறிகளின் பிள்ளைகள் நாளை அமெரிக்க குடிமக்களாக கருதப்படுவார்கள், உங்களால் ஏற்க முடிகிறதா எனவும் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோ பைடனின் இந்த திட்டமானது அமெரிக்க சட்டங்களை மீறுவதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடனின் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேறிகளின் ஒரு பெரும்படையே திரண்டுள்ளது. பொதுவாக 100,000 மக்கள் ஒவ்வொரு மாதமும் எல்லையை கடக்க முயற்சிப்பார்கள், ஆனால் பைடன் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை 200,000 என அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இன்னொரு செயலாக்க ஆணையால் அமெரிக்காவுக்கு படையெடுக்கும் கர்ப்பிணிகளை குறிவைக்க இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணிகள், மகப்பேறின் கடைசி நாட்களில் அமெரிக்காவுக்கு படையெடுப்பதுடன், இங்கேயே பிள்ளை பெற்றெடுப்பதுடன், அமெரிக்க குடிமக்கள் அந்தஸ்தை பெற்றுவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதன்பொருட்டு நாம் நமது எல்லைகளைப் பாதுகாப்போம், நமது இறையாண்மையை மீட்டெடுப்போம் என ட்ரம்ப் சூளுரைத்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!