தாய் மற்றும் சகோதரி சுட்டுக்கொலை: தண்டனையை கேட்டு கதறி அழுத 16 வயது சிறுவன்!

தாய் மற்றும் சகோதரியை கொடூரமாக கொன்ற 16 வயது சிறுவனுக்கு நீதிமன்றம் 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2020 ஆண்டு கானர் க்ரோ (Connor Crow) என்ற 13 வயது சிறுவன் அவரது சொந்த தாய் மெலிசா ரோலண்ட்(39) என்பவரையும் அவரது 15 வயது சகோதரியையும் துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொடூரமாக கொன்றுள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் வெளியே இருந்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவரே இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றதாக ஆரம்ப கட்டங்களில் பொலிஸாரிடம் சிறுவன் கானர் க்ரோ தெரிவித்து இருந்தார்.

ஆனால் பின்னர் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் நவம்பர் 2022ம் ஆண்டு தாய் மற்றும் சகோதரியை சுட்டுக் கொன்றதை சிறுவன் கானர் க்ரோ ஒப்புக் கொண்டார். ஆனால் 2020 முதல் நடந்து வரும் இந்த கொலை குற்ற விசாரணையில் எதற்காக தாய் மற்றும் சகோதரியை 13 வயது சிறுவன் கொலை செய்தார் என்று உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் வழக்கு விசாரணை முழுவதுமாக நிறைவுற்று சிறுவன் கொலை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு 80 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் நீதிமன்றத்தில் உரையாடிய வழக்கறிஞர், குற்றம் உறுதி செய்யப்பட்டாலும், எதற்காக சிறுவன் குற்றத்தை செய்தான் என்பது இன்னும் தெளிவாக தெரிய வராமலே உள்ளது என்று தெரிவித்தார்.

அத்துடன் வழக்கறிஞர் சிறுவனின் வயதினை குறிப்பிட்டு அவருக்கு 40 ஆண்டுகள் மட்டும் சிறைத் தண்டனை விதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும் கொலைக்கு 40 ஆண்டுகள் வீதம் இரண்டு கொலை குற்றத்திற்கு 80 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதி வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனை நினைத்து சிறுவன் நீதிமன்றத்திலேயே கண்ணீர் விட்டு அழுதான், தற்போது சிறுவனுக்கு 16 வயது என்பது குறிப்பிடத்தக்கது
   

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!