மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது தமிழரின் பலவீனம்!

மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது எமது தரப்பிலுள்ள பலவீனத்தையே காண்பிக்கின்றது என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்,தெரிவித்துள்ளார்.
    
தமிழ் அரசியல் கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீங்கள் ஏன் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்தீர்கள்? ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகள் அதற்கு எதிர்மறையாகக் கருத்து வெளியிடவில்லையா? என்று எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு அளித்துள்ள பதிலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அனைத்துத் தமிழ்த்தேசிய கட்சிகளும் 13 ஆவது திருத்தத்தின் உடனடி அமுலாக்கத்துக்கு இணங்கியுள்ளன. தமிழ் காங்கிரஸ் மாத்திரமே அதனை நிராகரித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் காங்கிரஸ் உள்ளடங்கலாக பதிவுசெய்யப்பட்ட 13 தமிழ் கட்சிகள் உள்ளன.
தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய 12 கட்சிகளில் 7 கட்சிகள் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வாக இல்லாவிட்டாலும்கூட 13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என்று ஆவணமொன்றில் கையெழுத்திட்டு, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளன. 8 ஆவது கட்சி குறித்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டாலும், அதற்கு இணங்கியுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய எஞ்சிய 4 கட்சிகளும் ஜனாதிபதிக்கான கடிதத்தில் கையெழுத்திடாவிடினும், அக்கட்சிகள் இதே கோரிக்கையை முன்வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தன.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய பிரதமர் தலையிடவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தவேண்டும் என்ற விருப்பம் 12 கட்சிகளுக்கும் பொதுவானதாகும்.

தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு என்ற விடயத்தில் அனைத்துத் தமிழ்த்தேசிய கட்சிகளும் சமஷ்டி முறையின் வடிவங்களைத் தமது இறுதி இலக்காகக் கொண்டிருக்கின்றன. தமிழ் காங்கிரஸ் உள்ளடங்கலாக எந்தவொரு கட்சியும் பிரிவினையைக் கோரவில்லை. ஆகவே அரசியலமைப்பில் ஏற்கனவே உள்வாங்கப்பட்டுள்ள சரத்தின் அமுலாக்கத்தை முன்னிறுத்தி அரசாங்கத்துடன் ஒருங்கிணைவதை ஏனைய தமிழ் கட்சிகள் விரும்பத்தகாத விடயமாக நோக்கக்கூடாது.

தம்மில் இருந்து மாறுபட்டு சிந்திப்பவர்களை துரோகிகளாகவோ அல்லது அரசாங்க அணியில் பயணிப்பவராகவோ அடையாளப்படுத்துகின்ற பண்பு ஏதோவொரு வழியில் எமது தமிழ் அரசியல்வாதிகளிடம் வந்துவிட்டது. குறித்தவொரு நபர் எமது நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அவர் என்ன கூறுகின்றார் என்பதைப் புரிந்துகொள்வதற்குப் பொறுமை அவசியமாகும். மாறாக அத்தகைய மாறுபட்ட நிலைப்பாட்டாளர்களைத் துரோகிகளாக சித்தரிப்பது எமது தரப்பிலுள்ள பலவீனத்தையே காண்பிக்கின்றது.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் புத்திஜீவிகள் எமது அரசியல் இலக்குகள் எத்தகையதாக அமையவேண்டும் என்ற கருத்தாடலையும் தர்க்கத்தையும் எம்மக்கள் மத்தியில் உருவாக்குவது பெரிதும் பயனுடையதாக அமையும். சமஷ்டி முறைமையைப் பரிந்துரைப்பவர்கள், அதனை ஆதரிப்பதற்கான விடயங்களைக் கொண்டிருப்பர். இருப்பினும் சமஷ்டியை பிரிவினை என்று நம்பும் சிங்கள பேரினவாத அரசாங்கத்துக்கு, இதுகுறித்து பொறுமையாக அறிவூட்டவேண்டும். எனவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதென்பது இப்பாதையை நோக்கிய முதற்படியாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!