குருந்தூர்மலை, திரியாய் விகாரைகளுக்கு ஏன் 5000 ஏக்கர் நிலம்? – ஆராயப் பணிப்பு.

குருந்தூர் விகாரை மற்றும் திருகோணமலை திரியாய் விகாரைக்கும் 5 ஆயிரம் ஏக்கர் காணி கோரப்பட்டுள்ள நிலையில் உடனடியாக அதனை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

தொல்பொருள் தேவைக்காக குருந்தூர் மலைப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கர் காணியும் திருகோணமலை திரியாய் விகாரைக்காக 2 ஆயிரம் ஏக்கர் காணிகள் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வனவளத் திணைக்களம், காணி திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றுக்குச் சொந்தமான காணிகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியினால் இந்தப் பகுதி தொல்பொருளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொல்பொருள் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இதனை கோருவதாக ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டிருந்தது.

அனுராதபுரம் மகா விகாரை அல்லது பாரம்பரியமிக்க சிகிரியாவுக்குக் கூட இவ்வாறு அதிகளவான காணிகள் இல்லாதபோது ஏன், குருந்தூர் மலை மற்றும் திரியாய் விகாரை ஆகியவற்றுக்கு 5 ஆயிரம் ஏக்கர் காணியை கோருகின்றனர் என்பதை விஞ்ஞான ரீதியிலான தரவுகளுடனும் ஆதாரங்களுடனும் கண்டறிய ஜனாதிபதி இந்தக் குழுவை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!