சனத் நிஷாந்தவுக்கு எதிரான மேன்முறையீடு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றையதினம்(27.06.2023) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ.மரிக்கார் முன்னிலையில், பிரதிவாதியான அமைச்சர் சனத் நிஷாந்த முன்னிலையான போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் 13ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை, நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தது. எனினும், அவர் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

தென்னிலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேக நபர்களை விடுவித்தமை தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில நீதிபதிகள் பொறுப்புக்கூற வேண்டும் என்று சனத் நிஷாந்தவினால் குற்றம் சுமத்தப்பட்டது.

அதுமட்டுமன்றி சில நீதிபதிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் இந்த குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பிணை வழங்குகிறார்கள்” என்று 2022 ஓகஸ்ட் மாதம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது சனத் நிஷாந்த தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி சட்டத்தரணிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!