பப்ஜியில் மலர்ந்த காதல்: 4 குழந்தைகளுடன் நாடு விட்டு நாடு தாவிய பெண்!

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் நொய்டாவைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துவிட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து வாழ்ந்துவந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் (Seema Ghulam Haider) என்ற பெண், டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சினை கேமிங் செயலியான PUBG கேமில் சந்தித்தார்.
    
சீமா, சச்சினுடன் ஆன்லைனில் சேட் செய்ய ஆரம்பித்தார், இறுதியில் காதலில் விழுந்தார். இந்த நிலையில், சீமா நேபாளம் வழியாக தனது நான்கு குழந்தைகளுடன் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தார். அவர் முதலில் உத்தரபிரதேசத்திற்குள் நுழைந்தார், பின்னர் பேருந்தில் பயணித்து சச்சின் வசித்துவந்த கிரேட்டர் நொய்டாவை அடைந்தார்.

இருவரும், நான்கு குழந்தைகளுடன் கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வாடகைக்கு குடியிருப்பில் ஒன்றாக வாழத் தொடங்கினர். விரைவில், கிரேட்டர் நொய்டாவில் பாகிஸ்தான் பெண் ஒருவர் சட்டவிரோதமாக வசித்து வருவதாக உள்ளூர் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தம்பதியினர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் பிரிஜேஷ், அவர்கள் மே மாதம் வீட்டை வாடகைக்கு எடுத்ததாக பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பிரிஜேஷின் கூற்றுப்படி, அவர்கள் நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், நான்கு குழந்தைகள் இருப்பதாகவும் சொன்னார்கள். “அப்பெண் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் போல் தெரியவில்லை. அவர் சல்வார் சூட் மற்றும் சேலை அணிந்திருந்தார்,” என வீட்டு உரிமையாளர் பொலிசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, சீமா, அவரது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சினை பொலிஸார் கைது செய்தனர். சீமா மற்றும் சச்சினிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணை முடிந்ததும் கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!